சென்னை
அடையாரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் - 5 மோட்டார் சைக்கிள்களும் நாசம்
|அடையாரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் - 5 மோட்டார் சைக்கிள்களும் நாசம்
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). மாற்றுத்திறனாளியான இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக தனது சகோதரரின் காரை வாங்கிச் சென்றார். காரை சுரேஷ்குமாரின் மற்றொரு நண்பர் பாபு என்பவர் ஓட்டினார்.
அவர்கள் நேற்று மதியம் 1.15 மணியளவில் அடையார் எல்.பி. சாலை வழியாக வந்தபோது காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனடியாக பாபு காரை நிறுத்தினார். காரில் இருந்து அவரும், சுரேஷ்குமாரும் கிழே இறங்கிய சற்று நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் மளமளவென கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அப்போது மேம்பாலத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ பரவியது. அவைகளும் தீப்பிடித்து எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்துவந்த மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் எரிந்த தீயை அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புகூடானது. மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்து கரும்புகை வெளியேறியவுடன் கீழே இறங்கி விட்டதால் சுரேஷ்குமாரும், அவரது நண்பர் பாபுவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.