கள்ளக்குறிச்சி அருகே கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு - காரில் பயணித்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
|கள்ளக்குறிச்சி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (52 வயது). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பழனிச்சாமி, அவரது மனைவி அஞ்சலை மற்றும் கார் டிரைவர் சாமிநாதன் ஆகிய மூன்று பேரும் இன்று மதியம் அவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் இருந்து, வேப்பூர் அருகே காஞ்சிராங்குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர்.
இந்த நிலையில் வேப்பூர் கூட்டு ரோடு அருகே வந்தபோது, காரை நிறுத்திவிட்டு பழங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்றனர். அப்போது கார் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக வேப்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் காரின் முன்பக்கம் முழுவதுமாக எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக காரில் சென்ற 3 பேரும் உயிர் தப்பினர்.