< Back
மாநில செய்திகள்
கீழ்ப்பாக்கத்தில் மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதி வியாபாரி பலி
சென்னை
மாநில செய்திகள்

கீழ்ப்பாக்கத்தில் மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதி வியாபாரி பலி

தினத்தந்தி
|
25 Jun 2023 2:21 PM IST

கீழ்ப்பாக்கத்தில் மின்னல் வேகத்தில் சென்ற கார் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதியதில் வியாபாரி ஒருவர் பலியானார்.

மின்னல் வேகம்

சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் என்ற அப்பு (வயது 42). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார். பகுதி நேரமாக வாடகை காரும் ஓட்டி வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 5.30 மணியளவில் காய்கறிகள் வாங்குவதற்காக தன்னுடைய பைக்கில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பச்சையப்பன் கல்லுரி சாலையின் அருகே சென்றபோது, அவருக்கு பின்னால், மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையின் மீது ஏறி முன்னால் சென்ற திருமுருகனின் பைக் மீதும் மோதியது.

இதில், திருமுருகன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கட்டுப்பாட்டை இழந்த கார் கல்லூரி சுவற்றின் மீது மோதி நின்றது. இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணை

இதேபோல, விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த நுங்கம்பாக்கம் ஏரி சாலைப் பகுதியை சேர்ந்த ஸ்ரீஷிவ் விக்ரம் (18) மற்றும் அவருடன் வந்த 3 நண்பர்களும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஸ்ரீஷிவ் விக்ரம் பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது தான் கல்லூரி சேர்ந்திருப்பதும், விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதேபோல, காரை ஓட்டி வந்த ஸ்ரீஷிவ் விக்ரமிடம் ஓட்டுநர் பழகுநர் சான்றிதழ் (எல்.எல்.ஆர்.) மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்