பஸ் நிறுத்தத்தில் டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய பேருந்து...பயணிகள் அச்சம்...!
|பஸ் நிறுத்தத்தில் டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய பேருந்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் அரசு பேருந்து இன்று காலை மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறங்கிவிட்ட பின்னர், டிரைவர் பேருந்தின் இன்ஜினை அணைக்காமல், நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து திடீரென தானாக இயங்கத் துவங்கியது. இதனைக் கண்டு பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். மேலும், பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து சென்று எதிரே இருந்த கடையின் சுவரில் மோதி நின்றது. இதில், அக்கடையின் சுவர் மற்றும் இரும்பு கிரில்கள் சேதமடைந்தன.
நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.