திருவொற்றியூர் கடற்கரையில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை சிக்னல் ரேடார் கரை ஒதுங்கியது
|‘மிக்ஜம்’ புயல் காரணமாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் திருவொற்றியூர் கடற்கரையில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை சிக்னல் ரேடார் கரை ஒதுங்கியது.
திருவொற்றியூர்,
'மிக்ஜம்' புயல் காரணமாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரையில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதவை சிக்னல் ரேடார் நேற்று கரை ஒதுங்கியது. இந்த சிக்னல் ரேடார் துறைமுகத்துக்கும், கடலுக்கும் நடுவே ஒரு நாட்டிக்கல் தூரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். மேற்பகுதியில் இருந்து துறைமுகத்துக்கு உள்ளே வரும் கப்பல்கள், விசைப்படகுகளுக்கும் திசை காட்டுவதற்காக வலதுபுறத்தில் பச்சை நிற விளக்கும், இடது புறத்தில் சிவப்பு நிற விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. கரை ஒதுங்கிய இந்த சிக்னல் ரேடாரை பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினார். இதை பார்த்த பொதுமக்கள் நேரில் பார்க்க ஆர்வத்துடன் கடற்கரையில் குவிந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், அங்கு குவிந்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பினர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் சிக்னல் ரேடாரை புகைப்படம் எடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள சென்னை துறைமுகம், அதானி துறைமுகம் மற்றும் காமராஜ் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தனர். அது சென்னை துறைமுகம் மற்றும் அதானி துறைமுகத்துக்கு சொந்தமானது அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அது காமராஜ் துறைமுகத்துக்கு சொந்தமானதாக இருக்குமா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.