< Back
மாநில செய்திகள்
13 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படும் சாலை
திருவாரூர்
மாநில செய்திகள்

13 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படும் சாலை

தினத்தந்தி
|
24 Jun 2023 12:15 AM IST

மன்னார்குடி அருகே 13 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே 13 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

மன்னார்குடி அருகே திருவண்டுதுறை கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் செல்லும் சாலை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு உரம், பூச்சி கொல்லி மருந்துகளை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத நிலையும், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் இருந்து வருகிறது.

தடுமாறி கீழே விழுந்து விபத்து

மழைகாலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டங்களில் வலியுறுத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சீரமைக்க வேண்டும்

13 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கஜேந்திரன் கூறுகையில், திருவண்டுதுறை தெற்கு தெரு சாலை 13 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த சாலையை ஏன் சீரமைக்கவில்லை என்பது தெரியவில்லை.

நிதி ஒதுக்கீடு

இந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறி 9 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை சாலையை சீரமைக்கவில்லை. சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்