வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் காளை கண்டெடுப்பு
|வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் என்றழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் என்றழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது. கடந்த இரண்டு கட்ட அகழாய்வில் 15 சூதுபவள கல்ணிகள் மணிகள் கிடைத்தன. செதுக்கு முறையில் சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப்பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இப்பதக்கம் 10.6 மில்லி மீட்டர் சுற்றளவும் 3.6 மில்லி மீட்டர் தடிமனும் 60 மில்லி கிராம் எடையும் கொண்டது. இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளைகள் கிடைத்த நிலையில் தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பாகும். சூதுபவள மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் மகாராட்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் கிடைக்கின்றன. இதுபோன்று கல்மணிகளில் உருவங்கள் குழிவான முறையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம் உரோம் நாட்டில் சிறப்புற்றிருந்தது.
இதுபோன்று கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி(பட்டணம்) அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறிக்கப்பெற்ற பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கீழடியில் காட்டுப்பன்றி உருவமும் முசிறியில் பாயும் சிங்கமும் கிடைக்கப்பெற்றுள்ளன. கீழடியிலும் முசிறியிலும் கிடைக்கப்பெற்ற சூதுபவள மணியால் ஆன பதக்கங்கள் சங்க காலத்தைச் சார்ந்தவை. அதேபோன்று வெம்பக்கோட்டையிலும் கிடைத்திருப்பது சிறப்பாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.