< Back
மாநில செய்திகள்
கச்சத்தீவில் திடீரென உருவான புத்த வழிபாட்டு தலம்; இருநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயல் என தமிழக மீனவர்கள் எதிர்ப்பு
மாநில செய்திகள்

கச்சத்தீவில் திடீரென உருவான புத்த வழிபாட்டு தலம்; இருநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயல் என தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
26 March 2023 12:24 AM IST

கச்சத்தீவில் புத்தர் சிலைகள் வைத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அகற்ற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கச்சத்தீவு

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ இரண்டு நாட்கள் நடைபெறும்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கைைய சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

கச்சத்தீவில் சில ஆண்டுகளாகவே இலங்கை கடற்படையினர் முகாம் அமைத்து 24 மணி நேரமும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு இலங்கை கடற்படையினர் புதிதாக 2 புத்தர் சிலைகளை அமைத்து ஒரு வழிபாட்டு தலத்தை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. அதை சுற்றி ஓலைகளால் தடுப்புகளையும் அமைத்துள்ளனர்.

இந்த திடீர் வழிபாட்டு தலம் பற்றிய படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புத்தர் சிலைகள்

இதுகுறித்து ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் கூறியதாவது:-

கச்சத்தீவை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கச்சத்தீவு தங்களுக்கு சொந்தமானது என்று, தங்களது ஆதிக்கத்தை செலுத்த இலங்கை அரசு நினைக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான் அங்கு புதிதாக புத்தர் சிலைகளை அமைத்து வழிபாட்டு தலத்தை நிறுவி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இது மதரீதியான பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள அந்த வழிபாட்டு தலத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகற்ற வேண்டும்

ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டமைப்பு தலைவர் சேசு ராஜா கூறியதாவது:-

1974-ல் உருவாக்கிய கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்கு எந்த ராணுவ முகாம், கடற்படை முகாம் அமைக்கக்கூடாது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை கடற்படையினர் அங்கு கடற்படை முகாம் அமைத்துள்ளனர். இந்த ஆண்டு அங்கு நடந்த அந்தோணியார் ஆலய திருவிழாவில் இலங்கையில் இருந்து சிங்கள புத்த பிட்ச்சுகள் வந்திருந்தனர். தற்போது கச்சத்தீவில் புத்த வழிபாட்டு தலம் கட்டி உள்ளனர். இது கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். இதுபோன்று புத்த சிலைகளை அங்கு அமைக்கும்பட்சத்தில் மற்ற மதத்தினரும் தங்கள் வழிபாட்டு தலத்தை அங்கு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு நிலை வரும். இது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே கச்சத்தீவில் புத்தர் சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்..

மேலும் செய்திகள்