திருவள்ளூர்
பள்ளிக்கூடம் கட்ட பள்ளம் தோண்டும் போது புத்தர் சிலை கண்டெடுப்பு
|மீஞ்சூர் அடுத்த குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டும் போது புத்தர் சிலை கிடைத்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் அடங்கியது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க அரசுப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளி கட்டிடம் பழமையானதல் அரசு உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. மீண்டும் அந்தப் பகுதியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்த நிலையில் பொக்லைன் இயந்திர உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது மண்ணில் மர்மமான பொருள் இருப்பது தெரியவந்தது. அதை சுத்தப்படுத்திய போது பழங்கால புத்தர் சிலை என்பது தெரியவந்தது. தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர் பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிஎட்டியப்பன் கிராம பொதுமக்கள் முன்னிலையில் பொன்னேரி தாசில்தாரிடம் புத்தர் சிலையை ஒப்படைத்தார் இச்சம்பவம் தேவதானம் ஊராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.