< Back
மாநில செய்திகள்
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

தினத்தந்தி
|
9 Nov 2022 6:33 PM GMT

கோடாலிகருப்பூர்-உடையார்பாளையம் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாயில் உடைப்பு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து உடையார்பாளையம் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தின் கீழ் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் உடையார்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமப்புற மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து உடையார்பாளையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் கோடாலிகருப்பூர் பூவாய்மண்டபம் அருகில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

வீணாகும் குடிநீர்

உடைப்பு மூலம் வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள சாலையில் வழிந்தோடி வயல்வெளிகளில் பாய்கிறது. இதனால் அப்பகுதி வழியாக கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் அன்னங்காரம்பேட்டை பகுதி மாணவ-மாணவிகள் தண்ணீரில் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். தண்ணீர் குபுகுபுவென வெளியேறி மீண்டும் குழாய் வழியாக உட்புகுவதால் குடிநீர் சுகாதார சீர்கேடு அடைகிறது. குழாயில் உடைப்பு ஏற்பட்டு உடைப்பு சரி செய்யப்படாதது குறித்து அப்பகுதி மக்கள் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். பல ஆயிரம் மக்கள் குடிநீர் தேவையை தீர்ப்பதற்காக கோடாலிகருப்பூரில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் தொடர்ந்து வீணாகி கொண்டிருப்பதோடு சுகாதார சீர்கேடு அடைவதை தடுக்க உரிய அதிகாரிகள் உடனடியாக குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என கோடாலிகருப்பூர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோடாலி கருப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் கூறுகையில், கடந்த 25 நாட்களாக கூட்டு குடிநீர் திட்ட குழாயில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. பூவாய் மண்டபம் வடிகால் வாய்க்காலின் மேல் அமைந்துள்ள குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு மூலம் வெளியேறும் தண்ணீர் பூஓடையில் கலந்து கொள்ளிடத்திலேயே கலக்கிறது. அதுபோல் சிறிது தூரத்திலேயே பூமியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தரையில் இருந்து தண்ணீர் கொப்பளித்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இது இப்பகுதியில் உள்ள சாலையில் ஓடி வீணாகிறது. இந்த 2 உடைப்புகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்