நாகப்பட்டினம்
மத்திய அரசின் தென்னை வாரிய கிளை அலுவலகத்தை அமைக்க வேண்டும்
|மத்திய அரசின் தென்னை வாரிய கிளை அலுவலகத்தை அமைக்க வேண்டும்
வேதாரண்யத்தில் மத்திய அரசின் தென்னை வாரிய கிளை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேளாண் இணை இயக்குனர் அகண்டராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-
தமிழ்ச்செல்வன்:- நெல்விதை 50 கிலோ மூட்டையாக வழங்கப்படுகிறது. அது ஒரு ஏக்கருக்கு உள்ள விதை நெல் ஆகும். ஒரு ஏக்கர் நிலம் உள்ள சிறு-குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 30 கிலோ எடை உள்ள விதை நெல் வழங்க வேண்டும். குறுவை நெல் நடமாடும் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளின் வீட்டிற்கே சென்று நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி இல்லாதபோது, சிறப்பு அனுமதி நாகை மாவட்டத்தில் வழங்கி இருந்தால், அது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சரபோஜி:- கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்கலத்தில் வாய்க்காலில் உடைந்த கதவணையை சரி செய்ய வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டிற்கு பதிவு செய்யும் காலத்தை நீட்டிக்க வேண்டும்.
தென்னை வாரிய கிளை அலுவலகம்
முஜிபுஷரிக்:- கோவில்பத்து நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் ஏற்றிச்செல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகமான லாரிகள் செல்வதால் வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்கள், மாணவர்களும் பாதிப்பிற்கு ஆளாகினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை உற்பத்தி அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் தென்னை வாரிய கிளை அலுவலகத்தை வேதாரண்யத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன்:- மின் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் மின் கட்டண கணக்கீடு செய்வதற்கு ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதை மேலும் 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
கமல்ராம்:- தலைஞாயிறு பகுதிக்கு 2021-22-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு மறுக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர். இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.