< Back
மாநில செய்திகள்
நோயால் படுத்த படுக்கையாக வேதனையோடு தவிக்கும் சிறுவன்
திருச்சி
மாநில செய்திகள்

நோயால் படுத்த படுக்கையாக வேதனையோடு தவிக்கும் சிறுவன்

தினத்தந்தி
|
24 July 2023 12:59 AM IST

நோயால் படுத்த படுக்கையாக சிறுவன் வேதனையோடு தவிக்கும் நிலை உள்ளது.

மணப்பாறை:

எலும்பு முறிவு

மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை அருகே உள்ள வெள்ளிவாடியை சேர்ந்தவர் முத்துக்குமார். விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதிக்கு கேசவன், சுப்பிரமணி(வயது 17) என 2 மகன்களும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். கூரை வேய்ந்த சிறிய கொட்டகையில் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இந்த தம்பதியின் 2-வது மகனான சுப்பிரமணி அரசு பள்ளியில் படித்து, இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்துள்ளார்.

இந்நிலையில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு முதலில் நாட்டு வைத்தியமும், பின்னர் அதற்கான மருத்துவ சிகிச்சையும் பெற்றுள்ளார். இருப்பினும் காலில் வலி அதிகமானதுடன், வீக்கம் ஏற்பட்டதால் அவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது காலில் சதை போன்று வளருவதாக கூறி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சுப்பிரமணிக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக கூறி மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சுப்பிரமணியை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சுப்பிரமணியை அவரது பெற்றோர் உடனடியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சுப்பிரமணிக்கு 17 நாட்கள் சிகிச்சை அளித்தும் குணமடையாத நிலையில் தினமும் சுப்பிரமணி வலியால் துடித்துள்ளார். அங்கும் அவரை காப்பாற்றுவது சிரமம் என்று கூறியதால் அவரை வெள்ளிவாடிக்கு பெற்றோர் அழைத்து வந்து விட்டனர். தற்போது சுப்பிரமணி உடல் மெலிந்து படுத்த படுக்கையாக உள்ளார்.

வலியால் துடிக்கும்...

மேலும் வலியால் துடிக்கும் அவரின் காலை அவரது தாய் கண்ணீருடன் பிடித்து விடுகிறார். சுப்பிரமணிக்கு தற்போது எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படாததால் நாளுக்கு நாள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார். மேலும் அவர், தன்னால் வலியை தாங்க முடியவில்லை என்றும், செத்து விடலாம் போல் இருப்பதாகவும் கூறுவதுடன், தன்னை கொன்று விடுமாறு தனது பெற்றோரிடம் சுப்பிரமணி கெஞ்சுவது உள்ளத்தை ெநாறுக்குவதாக உள்ளது.

இதனால் தங்களது மகனை காப்பாற்றி உயர் சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியின் பெற்றோரும், 'முதல்-அமைச்சர் என் மீது இரக்கம் கொண்டு, என்னை காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சுப்பிரமணியும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்