தங்கும் விடுதியில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம்: பயத்தில் அலறியதால் இருவரும் போலீசில் சிக்கினர்
|மாணவியிடம் வாலிபர் நைசாக பேசி விடுதிக்கு அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
கன்னியாகுமரி,
புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வாலிபர் ஒருவர் சீருடை அணிந்த மாணவியை அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் பயந்து போன மாணவி சத்தம் போட்டதால் குடியிருப்பு வாசிகள் போலீசில் புகார் செய்துள்ளனர். உடனே போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் வாலிபர் மீன்பிடி தொழில் செய்பவர் என்பதும், மாணவி கல்லூரி படித்து வந்ததும் தெரியவந்தது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நைசாக பேசிய வாலிபர், மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு இணங்காமல் பயத்தில் அலறியதால் இருவரும் போலீஸ் நிலையம் வரை செல்லும் நிலைமை உருவானது.
அதன் பின்னர் மாணவியின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.