< Back
மாநில செய்திகள்
பூதப்பாண்டி அருகே சிறுவன் மர்மச்சாவு:  குளத்துக்கு அழைத்து சென்ற மாணவனிடம்   அதிகாரிகள் தீவிர விசாரணை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பூதப்பாண்டி அருகே சிறுவன் மர்மச்சாவு: குளத்துக்கு அழைத்து சென்ற மாணவனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை

தினத்தந்தி
|
19 July 2022 1:23 AM IST

பூதப்பாண்டி அருகே சிறுவன் மர்மச்சாவில் அவரை குளத்துக்கு அழைத்து சென்ற மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே சிறுவன் மர்மச்சாவில் அவரை குளத்துக்கு அழைத்து சென்ற மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளத்தில் சிறுவன் பிணம்

கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்த்தவர் நிஜிபூ. இவருடைய மகன் ஆதில் முகமது (வயது 12), 7-ம் வகுப்பு படித்து வந்தான். ஆதில் முகமது கடந்த மே மாதம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். மே மாதம் 6-ந்தேதி மாலை நண்பர்களுடன் விளையாட சென்ற ஆதில் முகமது இரண்டு தினங்களுக்கு பின்பு மணத்திட்டை பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவு குறித்து நண்பரிடம் பலமுறை விசாரணை நடத்தியும் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியாமல் மர்மமாக இருந்தது.

மீண்டும் சூடுபிடித்தது

இந்தநிலையில் சிறுவன் மரணம் குறித்த உண்மையை கண்டறிய வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சியினர், எம்.பி.க்கள், தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினர். இதனை தொடர்ந்து ஆதில் முகமது இறப்பு தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.

நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.

மாணவனிடம் விசாரணை

அதன்படி சம்பவத்தன்று ஆதில் முகமதுவை மணத்திட்டை குளத்திற்கு அழைத்துச் சென்ற மாணவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் ஆதில் முகமதுவுடன் சென்ற மாணவனை அந்த குளத்தின் கரைக்கு அழைத்துச் சென்று ஆதில் முகமதுவின் சட்டை, பனியன் தேடும் பணி நடந்தது. ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அந்த மாணவனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனாலும், எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாணவனை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்

விரைவில் துப்பு துலங்கும்

இந்தநிலையில் நேற்று காலையில் மீண்டும் மாணவனை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, மாணவனுடன் அவரது உறவினர்களும் இருந்தனர். ஆனாலும், விசாரணை சிறார் பாதுகாப்பு விதிமுறையின்படியே நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆதில் முகமதுவின் மர்மச்சாவில் விரைவில் துப்பு துலங்கும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்