< Back
மாநில செய்திகள்
17 வயது மாணவருடன் காதல்: வயதை காரணம் காட்டி நிராகரித்ததால் 23 வயது மாணவியை கழுத்தை நெறித்துக்கொன்ற சிறுவன்...!
மாநில செய்திகள்

17 வயது மாணவருடன் காதல்: வயதை காரணம் காட்டி நிராகரித்ததால் 23 வயது மாணவியை கழுத்தை நெறித்துக்கொன்ற சிறுவன்...!

தினத்தந்தி
|
11 Jun 2023 11:50 AM IST

நண்பனின் அக்காவைக் காதலித்த 17 வயது சிறுவன் அவரை தனியே அழைத்துச் சென்று கழுத்தை நெறித்துக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி,

தருமபுரி நகராட்சி எட்டாவது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வர். 23 வயதான இவரது மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர் அதியமான் கோட்டை வனப்பகுதியில் சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்,.

ஹர்ஷா கடைசியாக ஒரு 17 வயது சிறுவனுடன் செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. ஹர்ஷாவின் தம்பியும் அவரும் கல்லூரியில் நண்பர்களாக இருந்துள்ளனர். பிளஸ் 2 முடித்ததும் சிறுவனுக்கும் ஹர்ஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

அப்போது, ஹர்ஷா ஓசூரில் வேலை கிடைத்ததும் அங்கு சென்றுவிட்டார். ஹர்ஷாவுக்கு வேலை கிடைத்ததும் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்தநிலையில் ஹர்ஷாவும் சிறுவனுடன் பேசுவதை குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிறுவன் ஹர்ஷாவை நேரில் சந்திக்க விரும்பியதால் அவர் கடந்த 6-ம் தேதி தருமபுரிக்கு வந்துள்ளார். அங்கிருந்து இருவரும் பைக்கில் நரசிங்கபுரம் கோம்பைக்கு சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஹர்ஷா தனக்குத் திருமண ஏற்பாடு நடப்பதைப் பற்றித் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனின் வயதைக் காரணம் காட்டி, தன்னை மறந்துவிடுமாறு கெஞ்சி உள்ளார். அதை ஏற்காத சிறுவனுக்கும் ஹர்ஷாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கோபம் அடைந்த சிறுவன் ஹர்ஷாவின் துப்பட்டாவைப் பறித்து அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின், ஹர்ஷாவின் உடலை பாறை மறைவில் ஒளித்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து போலீசார் சிறுவனை தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்