கடலூர் அருகே சாலை விரிவாக்க பணிக்கான பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி...!
|விருதாச்சலம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த சிறுவன் உயிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜய மாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயமூர்த்தி. இவரது மகன் வினோத் விஜயமாநகரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகே சென்றபோது, அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். பின்னர் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த சிறுவனின் பெற்றோர் வினோத் உடலை பார்த்து கதறி அழுதனர்.
உளூந்தூர்பேட்டை முதல் விருதாச்சலம் வரை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக விஜயமாநகரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்கப்படுகிறது. அதற்காகதான் அந்த பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், மழைநீரில் பள்ளம் தெரியாத வகையில் இருந்ததால், சிறுவன் வினோத் அதில் விழுந்து உயிரிழந்துள்ளார். சிறுவன் உயிரிழந்த ஆத்திரத்தில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே, தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஹாசினி என்ற சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். அதே மாதத்தில் திண்டுக்கல் மாவட்டம் கம்மாளப்பட்டியில் பள்ளத்தில் விழுந்து லத்தீஷ், சர்வின் என்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். தொடர்ச்சியாக தற்போது வினோத் என்ற சிறுவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களை முறையாக தடுப்புகள் வைத்து அடைத்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம் என பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர். மழைக்காலங்களில் கூடுதல் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் ஒப்பந்ததார்களை பணிசெய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் என்பதோடு, பள்ளம் தோண்டப்படும் இடங்களை அவ்வப்போது கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.