யாரையோ பற்றி வாசிக்கும்போது நம்மைப்பற்றி யோசிக்க வைப்பதால் புத்தகம் கண்ணாடி போன்றது - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
|புத்தகத்தில் யாரையோ பற்றி வாசிக்கும்போது அது நம்மைப்பற்றி யோசிக்க வைப்பதால் புத்தகம் கண்ணாடி போன்றது என்று பாராட்டு விழா ஒன்றில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
பாராட்டு விழா
எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய 'சூரிய வம்சம்' என்ற சுயசரிதை புத்தகத்துக்காக அவருக்கு 2022-ம் ஆண்டுக்கான 'சரஸ்வதி சம்மான்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில், எழுத்தாளர் சிவசங்கரிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவுக்கு 'சூரிய வம்சச் சுடர்' விழாக்குழு தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்கினார். விழாவில் மத்திய நிதி மந்திரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எழுத்தாளர் சிவசங்கரியை வாழ்த்தி சிறப்புரை வழங்கினார்.
வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ், கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் எம்.முரளி, டச்சஸ் கிளப் தலைவர் நீனா ரெட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி, சூரிய வம்சச் சுடர் விழாக்குழு செயலாளர்கள் ஷோபனா ரமேஷ், பர்வீன் சுல்தானா, இணை செயலாளர் வக்கீல் எம்.பி.நாதன், செயற்குழு உறுப்பினர் உலகநாயகி பழனி, வி.ஜி.பி. குழும இயக்குனர் வி.ஜி.பி.ராஜா தாஸ், த.மா.கா. தலைமை நிலையச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்டத் தலைவர் சைதை மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
எழுத்துக்கான மரியாதை குறையவில்லை
விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் விருதுக்கான விழா என்பது ஒரு பண்டிகை போன்று கொண்டாட வேண்டிய விஷயம். எழுத்தாளர்களுக்கு, தற்போது படிப்பது குறைந்து விட்டது, தங்களை பற்றி பேசுவது குறைந்துவிட்டது என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், எழுத்துக்களுக்கான மரியாதையில் எவ்விதமான குறைகளும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.
ஒரு புத்தகத்தில் யாரையோ பற்றி எழுதியதை படிக்கப் படிக்க நம்மை பற்றியும், நம்மிடம் உள்ள குணத்தை பற்றியும் யோசிக்க தோன்றும். எனவே, புத்தகம் என்பது ஒரு கண்ணாடி போன்றது. எனவே, புறநானூறு, போன்ற இலக்கியங்களை எடுத்து படிக்கும்போது உலகம் அப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறது. மனிதன் மட்டும் மாறவில்லை என்பது புரிகிறது. சில சமயம் சமுதாயத்தில் சீர்திருத்தம் ஏற்படுகிறது. சில சமயம் எதையும் கண்டு கொள்ளாமல் சென்றிருக்கிறது என்பது புரிகிறது.
நேரடியாக களத்தில் சென்று...
இதைத்தான் சிவசங்கரி போன்ற எழுத்தாளர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் உலகத்திற்கு சென்று அவர்களை நேரடியாக பார்த்து அவர்களின் மனதில் உள்ளதை புரிந்து அதில் இருக்கும் நல்லதையும், கெட்டதையும் எடுத்து சொல்லி உள்ளார். இது மேடையில் பேசுவது போன்றது அல்ல. அவர் களத்தில் நேரடியாக சென்று பார்த்து எழுதியிருப்பது தனித்திறமையாகும்.
இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ஜி.கே.மூப்பனார், ஜி.டி.நாயுடு போன்ற தலைவர்களை பற்றி சுயசரிதை புத்தகங்களையும் எழுதி உள்ளார். அவ்வாறு எழுதப்பட்ட 'சூரிய வம்சம்' என்ற சுயசரிதை புத்தகத்திற்காகத் தான் எழுத்தாளர் சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது கிடைத்து இருக்கிறது. இது அந்த ஒரு புத்தகத்துக்கான விருதாக நான் எடுக்கவில்லை. அவரது மொத்த திறமைக்கும் கொடுக்கப்பட்ட விருதாகவே நான் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.