< Back
மாநில செய்திகள்
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தக கண்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது-ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடு
சேலம்
மாநில செய்திகள்

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தக கண்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது-ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடு

தினத்தந்தி
|
18 Nov 2022 3:43 AM IST

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தக கண்காட்சி நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த கண்காட்சியை ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

புத்தக கண்காட்சி

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் புத்தக கண்காட்சி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கார்மேகம் கண்காட்சி நடைபெற உள்ள திடலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் புத்தக கண்காட்சி தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்படும் இந்த கண்காட்சியில் 210 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

ஒரு லட்சம் மாணவ, மாணவிகள்

இந்த கண்காட்சியையொட்டி, தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறுகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த வரலாறு, பண்பாடு, கலாசாரம் உள்ளிட்ட புத்தக தொகுப்புகளும் இடம் பெறுகின்றன. ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கண்காட்சியை பார்வையிடும் வகையில் ஒரு நாள் பணி நாளாக கருதி அனுமதி வழங்கப்படும்.

புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில், புதிய பஸ் நிலையத்தில் ஏர்ஹாரன்கள் ஒலிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களும் அமைதி பஸ் நிலையமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று 4 ரோடு முதல் 5 ரோடு வரை அமைதி சாலையாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மகளிர் திட்ட அலுவலர் பெரியசாமி உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்