< Back
மாநில செய்திகள்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் 13 வயது சிறுமியுடன் சென்னை வந்த பீகார் வாலிபர் கைது
சென்னை
மாநில செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 13 வயது சிறுமியுடன் சென்னை வந்த பீகார் வாலிபர் கைது

தினத்தந்தி
|
9 Sept 2022 1:48 PM IST

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 13 வயது சிறுமியுடன் சென்னை வந்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, கேரளா மாநிலம் இடுக்கியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இவர் சமீபத்தில் காணாமல் போனது தொடர்பாக கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாகேஷ் (வயது 24) என்ற வாலிபர், அந்த பெண்ணை ஏமாற்றி சென்னைக்கு கூட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கேரள போலீசார், சென்னை சென்டிரல் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இருவரின் புகைப்பட அடையாளங்களை கொண்டு, இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர், கண்காணிப்பு கேமரா உதவியுடன், கேரளாவில் இருந்து வரும் ரெயில்களை கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 6-வது நடைமேடையில், கேரளாவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அதில் இருந்து சிறுமியும், வாலிபரும் இறங்கி 6-வது நுழைவு வாயில் வழியாக வெளியே செல்வதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கவனித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் உதவியுடன், ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று சிறுமியையும், வாலிபரையும் பிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக கேரள போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட வாலிபர், கேரள போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்