தென்காசி
தோட்டத்தில் சுற்றித் திரிந்த கரடி; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
|கடையம் அருகே தோட்டத்தில் கரடி சுற்றித் திரிந்த வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
கடையம்:
தோட்டத்தில் புகுந்தது
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சிங்கராஜன் மகன் பென்சேகர். இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பின் செயலாளரான இவருக்கு தென்காசி மாவட்டம் கடையம் அருகே அடைச்சாணி கிராமத்தில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் தோட்டம் உள்ளது. அங்கு தென்னை, மா, நெல் மற்றும் மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பென்சேகர் தோட்டத்தில் அவ்வப்போது இரவு நேரத்தில் ஒற்றை கரடி சுற்றி திரிகிறது. மேலும் அங்குள்ள பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி, கரையான் புற்றுகளை தின்று சென்றுள்ளது.
வீடியோ காட்சிகள் வைரல்
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பென்சேகர் தோட்டத்திற்கு புகுந்த கரடி அங்குள்ள தொழுவத்தின் அருகே சென்று நீண்ட நேரமாக நின்றுள்ளது. அதை தோட்டத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், "இப்பகுதியின் அருகே பொத்தையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கரடிகள் உள்ளது. இவை அடிக்கடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. தற்போது வரை யாரையும் தாக்கவில்லை. என்றாலும் அச்சமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி, கருவேல மரங்களை அகற்றினால் கரடிகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். மேலும் வனத்துறையினரும் தீவிரமாக கண்காணித்து கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்" என்றனர்.