< Back
மாநில செய்திகள்
முதுமலையில் வாகனங்களுக்கு வழிவிட்டு சாலையில் நடந்து சென்ற கரடி - வாகன ஓட்டிகள் வியப்பு
மாநில செய்திகள்

முதுமலையில் வாகனங்களுக்கு வழிவிட்டு சாலையில் நடந்து சென்ற கரடி - வாகன ஓட்டிகள் வியப்பு

தினத்தந்தி
|
29 Jun 2022 10:02 AM IST

மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரடி ஒன்று எந்தவித பதட்டமும் இன்றி நடந்து சென்றதை கண்ட வாகன ஓட்டிகள் வியப்படைந்தனர்.

கூடலூர்:

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை, மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையும், மசினகுடிக்கு செல்லும் சாலையும் உள்ளது. இதனால் வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று கூடலூரில் இருந்து மைசூருக்கு வாகனங்கள் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக வழக்கம்போல் சென்றன. அப்போது கார்குடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கரடி ஒன்று எந்தவித பதட்டமும் இன்றி நடந்து சென்றது.

தொடர்ந்து சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டியபடி டிரைவர்கள் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர். சாலையின் நடுவில் கரடி நடந்து சென்றதால் பலர் வாகனங்களின் வேகத்தை குறைத்து மெதுவாக சென்றனர். இதைக்கண்ட கரடி சாலையின் எதிர்புறம் ஒதுங்கி நின்றது. அப்போது டிரைவர்கள் தங்களது வாகனங்களை வேகமாக ஓட்டியவாறு கரடியை கடந்து சென்றனர். அதுவரை கரடி சாலையோரம் பொறுமையாக நின்று வாகனங்களை பார்த்து கொண்டிருந்தது.

பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் சென்றது. அதன் பின்னர் கரையோரம் நின்று இருந்த கரடி மீண்டும் சாலைக்கு வந்து ஒய்யாரமாக நடந்து சென்றது. இதை பார்த்த வாகன டிரைவர்கள் வியப்படைந்தனர்.

மேலும் செய்திகள்