நெல்லையில் பெண்ணை கடித்து குதறிய கரடி
|கரடி கடித்ததில் படுகாயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காடு கக்கன்நகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யாபிள்ளை மனைவி பவானி (வயது 55). இவர் நேற்று காலையில் ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் மாடுகளுக்கு வாழைக்கன்றுகளை அறுக்க சென்றார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி தோட்டத்தில் பதுங்கி இருந்தது. அங்கு சென்ற பவானியை கரடி திடீரென்று விரட்டி சென்று கடித்து குதறியது. இதில் அவருக்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அலறினார். பின்னர் கரடி அங்கிருந்து தப்பி சென்றது.
பலத்த காயமடைந்த பவானி ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வீட்டுக்கு வந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரடி புகுந்த தோட்டத்தின் அருகில் ஏராளமான குடியிருப்புகளும், அரசு பள்ளியும் உள்ளது. வனப்பகுதியில் இருந்து கால்வாய் வழியாக வெளியேறிய கரடி, தோட்டத்தில் உள்ள புதர் செடிகளில் பதுங்கியிருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். எனவே, அங்கு கூண்டு வைத்து கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.