அரியலூர்
கொள்ளிடத்தில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட கோரிக்கை
|கொள்ளிடத்தில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாமரைக்குளம்:
குறை தீர்க்கும் கூட்டம்
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தூத்தூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வாழ்க்கை இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. புள்ளம்பாடி வாய்க்காலில் போதுமான தண்ணீர் வரவில்லை. இதனால் நஞ்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
எனவே நெற்பயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் அரியலூர் வருகை தர உள்ள நிலையில் அவரை விவசாயிகள் சந்திக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஓரியூர், நானாங்கூர், சிலுப்பனூர், ஆதனூர், கோமான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுக்கிரன் ஏரியில் இருந்து பாசனம் பெற்று நஞ்சை சாகுபடி செய்கிறார்கள். அந்த கிராமங்களை டெல்டா சாகுபடி கிராமங்களாக அறிவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பழைய நடைமுறையில் கடன் வழங்க வேண்டும். ஒரு விவசாயி 2 கிராமங்களில் நிலம் வைத்திருந்தாலும் ஒரே சங்கத்தில் கடன் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முறைகேடு
விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செங்கமுத்து பேசுகையில், அட்மா திட்டத்தில் அரியலூரில் இருந்து கரூருக்கு பயிற்சிக்கு 50 விவசாயிகளை அழைத்துச் சென்றனர். இதில் 15 பெண் விவசாயிகளை அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் ஒருவரை கூட அழைத்துச் செல்லவில்லை. 2 நாள் சுற்றுலா ஒரு நாளில் முடிக்கப்பட்டது.
திருமானூர் வட்டார கரும்பு விவசாயிகளுக்கான பயிற்சி 2 நாட்களில் முடிக்கப்பட்டது. இதுபோன்ற முறைகேடு தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் பால் விற்பனை குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைப்பதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.A barricade with a gate should be constructed at the site
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் பேசுகையில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை கட்டுவதற்கான காலக்கெடுவை ஒரு வருடமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள 6 ஓடைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், கடந்த 2 மாதங்களில் பெய்த கனமழையால் மருதையாறு, கொள்ளிடத்தில் கரைபுரண்டு வந்த வெள்ளத்தால் வைப்பார், தூத்தூர், குருவாடி, முட்டுவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், அரங்ககோட்டை, கோவிந்தபுத்தூர், சாத்தம்பாடி ஆகிய கிராமங்களில் நெல், மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி ஆகிய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய தாலுகாக்களில் விவசாயிகளுக்கு முந்திரி மரக்கன்று வழங்க வேண்டும். கடந்த ஆண்டு மரக்கன்று வழங்கியதில் மானியம் வழங்காதது தொடர்பாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்து, கடலை பயிருக்கு கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான காப்பீடு பெற்றுத்தர வேண்டும். மருதையாற்றின் கரையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான விவசாயிகளுக்கு மாட்டுக்கொட்டகை வழங்க வேண்டும். தரமான கடலை விதைகள் வழங்க வேண்டும் என்றார்.
மேலும் விவசாயிகள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை தெரிவித்தனர்.