காதல் திருமணம் செய்த வங்கி பெண் ஊழியர் தற்கொலை... கணவரும் தற்கொலை முயற்சி
|மனைவி இறந்த துக்கத்தில் இருந்த இனியவன் மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார்.
தென்காசி,
சேலம் மாவட்டம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியைச் சேர்ந்தவர் இனியவன் (33 வயது). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா (31 வயது). தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் வசித்தனர். இந்த நிலையில் இனியவன் மருத்துவ பயிற்சிக்காக 6 மாதம் வெளியூருக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் சவுமியாவை சேலத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் தங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் சவுமியா தனி அறையில் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு தூங்கினார். நீண்ட நேரமாகியும் சவுமியா அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அங்கு சவுமியா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சவுமியா பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த இனியவன் திடீரென்று தற்கொலைக்கு முயன்றார். அவர், மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.