காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை... தாயுடன் சேர்த்த வனத்துறையினர்
|தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை தாயுடன் சேர்க்கப்பட்டதாக முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர், மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த சூழலில் மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் சுற்றுலாப் பயணிகள் நேற்று வாகனத்தில் செல்லும்போது பிறந்து சில வாரங்கள் மட்டுமே ஆன குட்டி யானை ஒன்று மரத்தின் அடியில் தனியாக நின்று கொண்டு பின்னர் ஓடுவதை கண்டனர். இதனால் தாயைப் பிரிந்து குட்டி யானை தனியாக தவிப்பதை சுற்றுலாப் பயணிகள் அறிந்தனர்.
பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வன ஊழியர்கள் டிரோன் கேமரா மூலம் தாய் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் மசினகுடி வனப்பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, அதன் தாயுடன் சேர்க்கப்பட்டதாக முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அசூரா மட்டம் பகுதியில் யானை கூட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் குட்டியை அதன் தாயோடு இணைத்தனர். எனினும் குட்டி யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.