< Back
மாநில செய்திகள்
கோவையில் தாயை விட்டு பிரியாமல் பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை
மாநில செய்திகள்

கோவையில் தாயை விட்டு பிரியாமல் பாசப் போராட்டம் நடத்தி வரும் குட்டி யானை

தினத்தந்தி
|
31 May 2024 5:25 PM IST

தொடர் சிகிச்சையின் பலனாக யானையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் மருதமலை அருகே பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் எழுந்து நடக்க முடியாமல் நேற்று ஒரே இடத்தில் படுத்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது யானையின் அருகே 3 மாத குட்டி யானையும் அங்கும் இங்குமாக தாயை சுற்றி வந்துகொண்டிருந்தது.

இதையடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவுசெய்தனர். அதன்படி, நேற்று முதல் தற்போது வரை யானைக்கு 30 குளுக்கோஸ் பாட்டில்கள் செலுத்தப்பட்டது. யானையின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, யானையை எழுந்து நிற்கவைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக கிரேன் ஒன்று வரவழைக்கப்பட்டு, யானையை வனத்துறையினர் நிற்க வைத்தனர். யானையின் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

2-வது நாளாக இன்று யானைக்கு இளநீர், தர்பூசணி என நீர்ச்சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சத்து மாத்திரை, எனர்ஜி டானிக் ஆகியவையும் கொடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலம் சரியில்லாமல் காணப்பட்ட தாய் யானையை விட்டு பிரிய மனமில்லாமல் 2 நாட்களாக பாசத்துடன் குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி வந்தது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. யானையை குணப்படுத்தி வனப்பகுதிக்கு அனுப்பும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்