வேலூர்
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
|5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டி.ஐ.ஜி.யிடம் பெண் மனு அளித்தார்.
சீட்டு நடத்தி மோசடி
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சாய்நாதபுரத்தை சேர்ந்த முதியவர் அளித்துள்ள மனுவில் நான் சாய்நாதபுரத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.5 லட்சம் வீதம் மூன்று சீட்டு கட்டினேன். சீட்டு முடிந்ததும் அவர் ரூ.15 லட்சம் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மட்டும் கொடுத்து மீதி தொகையை பிறகு தருவதாக கூறினார். பின்னர் வீட்டை காலி செய்து தலைமறைவாகி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறி உள்ளார்.
திருவலத்தை சேர்ந்த அசோக்குமார் அளித்துள்ள மனுவில் காட்பாடியை சேர்ந்த ஒரு அரசியில் பிரமுகர் எனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே அந்த பணத்தை மீட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாலியல் துன்புறுத்தல்
வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் அளித்துள்ள மனுவில் என் பேத்திக்கு 5 வயதாகிறது. சம்பவத்தன்று குழந்தை தன் தாயுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது அங்கு உறவினர் ஒருவர் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் குழந்தைக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
காட்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் அளித்துள்ள மனுவில் எங்கள் வீட்டின் எதிரில் உள்ள தெருவை ஒரு தம்பதி அவர்களது வீட்டின் முன் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறிந்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.