திருவள்ளூர்
தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு
|திருத்தணியில் தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ் (வயது 38). லாரி டிரைவர். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும், மணிகண்டன் (12), சஞ்சனா (6), கிஷோர் (3) என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2-ந் தேதி இவர்களின் 3-வது மகனான கிஷோர் வீட்டு படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார். பின்னர் மறுபடியும் கிஷோர் விளையாட்டுத்தனமாக படியில் ஏறி சேட்டை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தாய் செல்வி கம்பால் கிஷோரை முதுகில் அடித்துள்ளார்.
இதனால் குழந்தை கிஷோர் சுய நினைவின்றி மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சிடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கிஷோரை அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்புரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தை கிஷோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை கிஷோர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.