< Back
மாநில செய்திகள்
குளச்சல் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குளச்சல் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி

தினத்தந்தி
|
19 April 2023 2:28 AM IST

குளச்சல் அருகே பக்கத்து வீட்டில் விளையாட சென்ற போது தண்ணீர் தொட்டியில் விழுந்து மூழ்கி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

முள்ளூர்துறை அருகே உள்ள ராமன்துறையை சேர்ந்தவர் சுஜின். கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு 3 வயதில் ஷகிப் சேண்டினோ என்ற மகனும், ஷியோனா என்ற 11 மாத குழந்தையும் உண்டு. வர்ஷாவின் தாய் வீடு குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வர்ஷா குழந்தைகளுடன் வாணியக்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். மாலையில் குழந்தை ஷகிப் சேண்டினோ வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் பக்கத்து வீட்டில் விளையாட சென்றான்.

பின்னர் வெகு நேரமாகியும் குழந்தை திரும்ப வரவில்லை. இதனால், குழந்தையை ேதடி பக்கத்து வீட்டுக்கு சென்றனர். அங்கு குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வர்ஷாவும், அவரது உறவினர்களும் குழந்தையை பல இடங்களில் தேடினர். ஆனால், குழந்தை கிடைக்கவில்லை.

தண்ணீர் தொட்டியில் பிணம்

இறுதியில் பக்கத்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்த்த போது குழந்தை ஷகிப் சேண்டினோ இறந்த நிலையில் பிணமாக கிடந்தான். அந்த தண்ணீர் தொட்டி தரை மட்டத்தின் கீழே கட்டப்பட்டிருந்தது. அதன் மூடியை சரியாக மூடாததால் குழந்தை தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. குழந்தையின் உடலை பார்த்த வர்ஷாவும், உறவினர்களும் கதறி அழுதனர்.

இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்