திருவள்ளூர்
திருத்தணி அருகே குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை சாவு
|திருத்தணி அருகே உறவினர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா குருவராஜப்பேட்டை தங்கச்சாலை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). இவருக்கு திருமணமாகி நாகவல்லி (25) என்ற மனைவியும், மோகித் (5) என்ற மகனும், நிரஞ்சனா (3) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகவல்லி தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை புஜ்ஜிரெட்டிப்பள்ளி கிராமத்திற்கு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை நாகவல்லி, ரமேஷ் ஆகியோர் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பரபரப்பாக ஈடுபட்டு கொண்டிருந்தபோது, இவர்களுடைய மகள் நிரஞ்சனா வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யப்பன் என்பவர் வீட்டில் மூடப்படாமல் இருந்த குடிநீர் தொட்டிக்குள் நிரஞ்சனா எதிர்பாராத விதமாக தவறி விழுந்தாள். குழந்தை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி பார்த்த போது குழந்தை குடிநீர் தொட்டிக்குள் விழுந்து மயக்கி கிடப்பது தெரியவந்தது.
உடனடியாக குழந்தையை மீட்ட பெற்றோர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட குழந்தையின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உறவினரின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் குழந்தை குடிநீர் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.