< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் அருகே அங்கன்வாடி கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி
மாநில செய்திகள்

பெரம்பலூர் அருகே அங்கன்வாடி கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி

தினத்தந்தி
|
28 Nov 2022 7:00 PM IST

பெரம்பலூர் அருகே அங்கன்வாடி மையம் கட்ட தோண்டப்பட்ட குழியில் 3 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் மாவிலிங்கை பகுதியில், அங்கன்வாடி மையம் கட்ட தோண்டப்பட்ட குழியில் 3 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவிலிங்கை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் 3 வயது மகன் ரோகித் சர்மா. ரோகித் சர்மாவும் அவரது உறவுக்கார 2 வயது பெண் இலக்கியாவும் இன்று மாலை அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. வீட்டின் அருகே புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரோகித் சர்மா எதிர்பாராத விதமாக அந்த பள்ளத்தில் விழுந்துள்ளான். இலக்கியாவின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது இலக்கியா, அந்த பள்ளத்தை கைகாட்டிய போது, ரோகித் சர்மா அந்த பள்ளத்தில் மூழ்கியது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடலை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்