திருச்சி
மளிகைக்கடையில் நின்ற மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
|மளிகைக்கடையில் நின்ற மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் விஜயா நகரை சேர்ந்தவர் நாராயணி(வயது 73). இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், நாராயணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேற்று காலை மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் சங்கிலி பறித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.