சென்னை
கொடுங்கையூரில் பால் குடித்துவிட்டு தூங்கிய 3 மாத பெண் குழந்தை சாவு
|கொடுங்கையூரில் பால் குடித்துவிட்டு தூங்கிய 3 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர், எழில் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கர். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வர்ஷனா என பெயரிட்டு இருந்தனர்.
நேற்று மதியம் ராஜேஸ்வரி, தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சு இன்றி அசைவற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குழந்தையின் சாவுக்கான காரணம் தெரியவரும். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.