தூத்துக்குடி
குலசேகரன்பட்டினத்தில் 2வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது
|குலசேகரன்பட்டினத்தில் 2வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துளசிமாலை விற்ற பெண்
மதுரை மாவட்டம் சவுந்திரபாண்டியன்நகர் சக்திமங்கலத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி அம்சவள்ளி (வயது 36). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை இறந்து விட்டார். இதையடுத்து விழாக்காலங்களில் அம்சவள்ளி குழந்தைகளுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று துளசிமாலை, பேன்சி பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வந்தார்.
அதன்படி, குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவையொட்டி, கடந்த 15-ந்தேதியில் இருந்து அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை பகுதியில் தங்கியிருந்து துளசிமாலை, பேன்சி பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வந்தார்.
குழந்தை கடத்தல்
நேற்று முன்தினம் இரவில் வியாபாரம் முடிந்ததும் அம்சவள்ளி வழக்கம்போல் தனது குழந்தைகளுடன் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையிலே தூங்கினார். பின்னர் அவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் கண்விழித்து பார்த்தபோது, இளைய மகள் கார்த்திகை வள்ளி (2) மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. தாயார் அம்சவள்ளியுடன் தூங்கிய குழந்தையை மர்மநபர் நைசாக கடத்தி சென்றது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் 28-ந்தேதி குலசேகரன்பட்டினம் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியரின் 1½ வயது ஆண் குழந்தையை திருச்செந்தூரில் ஒரு பெண் கடத்தி சென்றார். பின்னர் அந்த குழந்தை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
------