கோயம்புத்தூர்
2 வயது சிறுமிக்கு மலேரியா காய்ச்சல்
|வால்பாறையில் 2 வயது சிறுமிக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வால்பாறை
வால்பாறையில் 2 வயது சிறுமிக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சிறுமிக்கு காய்ச்சல்
ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள காபி தோட்டத்தில் வேைல பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது குழந்தையான 2 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. உடனே வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரத்த மாதிரி சேகரிப்பு
இதைத்தொடர்ந்து மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் கொசு மருந்து அடித்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாபுலட்சுமண் தலைமையில் மருத்துவ குழுவினர் மற்றும் இல்லம் தேடி திட்ட மருத்துவ பணியாளர்கள் அனைத்து தொழிலாளர்களையும் பரிசோதனை செய்து 150 பேரிடம் இருந்து ரத்த மாதிரியை எடுத்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இங்கு பல ஆண்டுகளுக்கு பிறகு மலேரியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.