சென்னை
தந்தை ஓட்டி வந்த கார் மோதி 2 வயது குழந்தை படுகாயம்
|தந்தை பின்னோக்கி ஓட்டி வந்த கார் மோதியதில் 2 வயது குழந்தை படுகாயம் அடைந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் முத்துலட்சுமி நகர் முத்துலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 48). இவர் கார்ட்டூன் டிசைனராக உள்ளார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (40). இவர்களுக்கு 2 வயதில் யாழினி, யாயினி என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய கருப்பசாமி, மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அவர் மட்டும் வெளியே செல்வதற்காக காரை எடுக்க முயன்றார். அப்போது தனது ஒரு குழந்தை யாழினியை முன்பக்கமாக நிறுத்திவிட்டு காரை பின்னோக்கி ஓட்டிவந்தார்.
ஆனால் வீட்டுக்குள் இருந்த மற்றொரு குழந்தை யாயினி, யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து காரின் பின்புறம் வந்து நின்றாள். இதனை அவர் கவனிக்கவில்லை என தெரிகிறது. இதில் பின்னோக்கி ஓட்டிவந்த கார் மோதியதில் யாயினி படுகாயம் அடைந்தாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை குரோம்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு யாயினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.