காஞ்சிபுரம்
வாலாஜாபாத் அருகே பண்ணை வீட்டில் கார் மோதி 2 வயது குழந்தை பலி - போலீசார் விசாரணை
|வாலாஜாபாத் அருகே பண்ணை வீட்டில் கார் மோதி 2 வயது குழந்தை பலியானது. இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வாலாஜாபாத் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசங்கர். திருமண மண்டப உரிமையாளரான இவருக்கு சொந்தமாக வாலாஜாபாத் அடுத்த கிதிரிப்பேட்டை கிராமத்தில் பண்ணை நிலம் மற்றும் பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணை நிலத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த மூர்த்தி (வயது 32), கன்னியம்மாள் (25) ஆகிய கணவன், மனைவி இருவரும் தங்களின் 8 வயது மகன் வேலு மற்றும் 2 வயது மகள் காவியா ஆகியோருடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் துரைசங்கர் பண்ணை நிலத்தை சுற்றி பார்பதற்காக காரில் கிதிரிப்பேட்டை பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் காரில் ஏறி வெளியே புறப்பட்ட நிலையில், அங்கே விளையாடி கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக காருக்கு அடியில் சிக்கி கொண்டதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த வாலாஜாபாத் போலீசார் விரைந்து வந்து பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விபத்து குறித்து வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.