< Back
மாநில செய்திகள்
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலி
வேலூர்
மாநில செய்திகள்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலி

தினத்தந்தி
|
26 Jun 2023 7:14 PM IST

வேலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 வயது ஆண் குழந்தை

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் பெரியார்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சுகந்தி (வயது 23). இந்த தம்பதியினருக்கு லித்திக் (2) என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

சதீஷ்குமார் நேற்று காலை வேலை விஷயமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சுகந்தி பக்கத்து தெருவில் வசிக்கும் உறவினர் வீட்டில் லித்திக்கை சிறிதுநேரம் பார்த்து கொள்ளும்படி விட்டு சென்றுள்ளார்.

உறவினர் முன்னிலையில் வீட்டின் முன்பகுதியில் உள்ள இடத்தில் குழந்தை விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு வேலையாக உறவினர் வீட்டின் உள்ளே சென்றுவிட்டு சிறிதுநேரத்துக்கு பின்னர் வெளியே வந்துள்ளார். வீட்டின் முன்பாக விளையாடி கொண்டிருந்த லித்திக்கை காணவில்லை.

அதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீடு முழுவதும் தேடி பார்த்தனர். மேலும் அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்களிடம் லித்திக் பற்றி விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

தண்ணீர் தொட்டியில் விழுந்து சாவு

இந்த நிலையில் அவர்கள் வீட்டின் முன்பாக காணப்பட்ட தரைத்தள தண்ணீர் தொட்டிக்குள் தேடிப்பார்த்தனர். அங்கு குழந்தை விழுந்து கிடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து லித்திக்கை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை லித்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தையின் பிணம் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்