திருவள்ளூர்
பேரம்பாக்கம் அருகே குட்டையில் தவறி விழுந்த 2½ வயது குழந்தை சாவு
|பேரம்பாக்கம் அருகே குட்டையில் தவறி விழுந்த 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தான்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள கொண்டஞ்சேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). இவருக்கு சுமித்ரா (30) என்ற மனைவியும், யுகேந்தர் (9), சிவகார்த்திக்(2½) என்ற மகன்களும் யாமினி (9) என்ற மகளும் உள்ளனர். யுகேந்தவர், யாமினி இருவரும் இரட்டையர்கள் ஆவார்கள்.
சிலம்பரசன் நெல் அறுவடை எந்திரம் ஓட்டும் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சிலம்பரசன் தன் வீட்டின் பின்னால் நிற்கவைக்கப்பட்டு இருந்த நெல் அறுவடை எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அவரது அருகில் சிவகார்த்திக் நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சிவகார்த்திக் வீட்டின் பின்பக்கம் இருந்த குட்டையின் அருகே அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாட சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக குட்டையில் தவறி விழுந்த சிவகார்த்திக் குட்டையில் மூழ்கினான்.
இதை பார்த்த உடனிருந்த சிறுவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து குட்டையில் தவறி விழுந்த சிறுவனை மீட்டனர். உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக பேரம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். சிவகார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மப்பேடு சப்- இன்ஸ்பெக்டர் ஜான் ராயப்பா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.