நீலகிரி
வனப்பகுதியில் இறந்து கிடந்த 2 மாத புலிக்குட்டி
|ஊட்டி அருகே வனப்பகுதியில் 2 மாத ஆண் புலிக்குட்டி இறந்து கிடந்தது.
ஊட்டி
ஊட்டி அருகே வனப்பகுதியில் 2 மாத ஆண் புலிக்குட்டி இறந்து கிடந்தது.
புலிக்குட்டி சாவு
நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. நீலகிரியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், வனப்பகுதியில் வனவிலங்குகளுடன் மோதல், நோய் உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நீலகிரி மற்றும் முதுமலை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 புலிகள் இறந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட சீகூர் வனச்சரக எல்லையில் ரோந்து சென்றனர். அப்போது சின்னக்குன்னூர் பெந்தட்டி அருகில் உள்ள வனப்பகுதியில் புலிக்குட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட வன அதிகாரி கவுதம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த புலிக்குட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ், கால்நடை டாக்டர் ரேவதி தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் புலிக்குட்டியின் உடல் அந்த பகுதியில் எரிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
பெந்தட்டி வனப்பகுதியில் இறந்து கிடந்தது 2 மாத ஆண் புலி குட்டியாகும். பிரேத பரிசோதனையில், அதன் வயிற்றில் பால் இல்லாததால் புலிக்குட்டி இறந்தது தெரியவந்து உள்ளது. புலிக்குட்டி இறந்து கிடந்த பகுதியில் தாய் புலியை காணவில்லை. எனவே, வனப்பகுதியில் இதேபோல் புலிக்குட்டிகள் இறந்து உள்ளதா?, தாய் புலி எங்கு சென்றது? என்பது குறித்து சீகூர் மற்றும் ஊட்டி வடக்கு வனத்துறையினர் வனவர் நவரத்தினம் தலைமையில் வனப்பகுதியில் தேடி வருகின்றனர். மேலும் புலிக்குட்டியின் உடல் உள் உறுப்புகள் ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். நீலகிரி வனப்பகுதியில் தொடர்ந்து புலிகள் இறப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.