திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் 19 வயது இளைஞர் அடித்துக்கொலை
|இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர். அவரது மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 19). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார். இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து (35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.