< Back
மாநில செய்திகள்
திருமணத்துக்கு மறுத்த 17 வயது சிறுமி மர்ம சாவு
சேலம்
மாநில செய்திகள்

திருமணத்துக்கு மறுத்த 17 வயது சிறுமி மர்ம சாவு

தினத்தந்தி
|
27 Sept 2022 12:48 AM IST

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே 17 வயது சிறுமி திருமணத்துக்கு மறுத்ததால் அவளின் தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனிடையே அந்த சிறுமியும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் ெகாலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அயோத்தியாப்பட்டணம்:-

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே 17 வயது சிறுமி திருமணத்துக்கு மறுத்ததால் அவளின் தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனிடையே அந்த சிறுமியும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் ெகாலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமி கடத்தல்

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரம் பூமரத்து காட்டு பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சியாமளா (36). இவர்களுக்கு ஸ்ரீதேவி (17), கோமதி(15) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

இவர்களில் மூத்த மகள் ஸ்ரீதேவி 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளாள். கோமதி 6-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் உள்ளாள். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி ஸ்ரீதேவி காணாமல் போனதாக கூறி, காரிப்பட்டி போலீசில் தந்தை அறிவழகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் சம்பத் (22), ஸ்ரீதேவியை திருமணம் செய்வதாக அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை கடத்தியதாக சம்பத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தாயார் விஷம் குடித்தார்

இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி ஸ்ரீதேவிக்கு, வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் தற்போது திருமணம் வேண்டாம் என்று ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஸ்ரீதேவியின் தாயார் சியாமளா, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார்.

இதைப் பார்த்த அவரது கணவர் அறிவழகன் உடனடியாக மனைவியை மின்னாம்பள்ளி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் அறிவழகனும், 2-வது மகள் கோமதியும் இருந்துள்ளனர். வீட்டில் மூத்த மகள் ஸ்ரீதேவி மட்டும் இருந்துள்ளாள்.

சிறுமி சாவு

பின்னர் நேற்று காலை 7 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து அறிவழகன் மட்டும் தனது வீட்டுக்கு சென்றார். அங்கு அவருடைய மகள் ஸ்ரீதேவி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும், காரிப்பட்டி போலீசார் அறிவழகனின் வீட்டுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்ரீதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

பொதுமக்கள் சாலைமறியல்

ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் ஆம்புலன்ஸ் சென்றபோது அதை பொதுமக்கள் சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிறுமி ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அவரது சாவில் இருக்கும் மர்மம் தெரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்வேதா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சிறுமி ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக அங்கு கூடியிருந்தவர்களிடம் உறுதி அளித்தார்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஸ்ரீதேவியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொலையா? போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து 17 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்ததாக கூறி காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குறிப்பாக சிறுமிக்கு கட்டாய திருமணம் நடக்க இருந்த முயற்சியில் அதற்கு ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் அவருடைய தாய் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையறிந்து சிறுமி ஸ்ரீதேவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கட்டாய திருமணத்துக்கு மறுத்ததால் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் அந்த சிறுமி எப்படி இறந்தார் என்பது தெரியவரும். அந்த அறிக்கையின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்