< Back
மாநில செய்திகள்
துரைப்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த 17 வயது சிறுமி தற்கொலை; போக்சோ சட்டத்தில் கணவர்-மாமனார் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

துரைப்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த 17 வயது சிறுமி தற்கொலை; போக்சோ சட்டத்தில் கணவர்-மாமனார் கைது

தினத்தந்தி
|
20 March 2023 2:46 PM IST

காதல் திருமணம் செய்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் மற்றும் மாமனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

காதல் திருமணம்

சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும், மதுராந்தகம் அருகே நாகமலை கிராமம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த சரத்குமார் (22) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

சிறுமிக்கு 17 வயதே ஆவதால், இது குழந்தை திருமண தடை சட்டத்துக்கு புறம்பானது என்றாலும், சிறுமியின் விருப்பத்தின்பேரிலேயே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் சிறுமி கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த 16-ந் தேதி மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெருங்குடி கல்லுக்குட்டையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சிறுமியை அழைத்து வந்த சரத்குமார், இன்னும் ஒரு சில தினங்களில் வீட்டில் பேசிவிட்டு மீண்டும் வந்து அழைத்து செல்வதாக கூறிவிட்டு சிறுமியை விட்டுச்சென்றார். இந்தநிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாமியாருடன் தகராறு

விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட சிறுமிக்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது. வீட்டு வேலைகள் செய்யவில்லை என கூறி சிறுமியை அவருடைய மாமியார் திட்டியதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

அப்போது சிறுமியை தகாத வார்த்தையால் திட்டியதுடன், ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் சாகடித்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே சிறுமியை அவரது கணவர் பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்றதும் தெரிந்தது.

கணவர்-மாமனார் கைது

இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார் போக்சோ பிரிவு, 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்தது உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சரத்குமார், அவருடைய தந்தை வேணு (55) ஆகியோரை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான மாமியார் உள்பட குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த 9 மாதத்தில் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்