நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு...!
|நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வந்தது. இந்த ஓட்டலில் இருந்து சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலையில் சுஜாதா, கலையரசி, மற்றும் கலையரசியின் மாமா, அத்தை உள்ளிட்டோர் ஓட்டலுக்கு சென்று சவர்மா உள்ளிட்ட உணவு வகைகளை பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டனர்.
அதன் பிறகு மாணவி கலையரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, மகளை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உயிரிழந்த சிறுமியின் தம்பி பூபதி (12), உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் 10 பேர் சவர்மா, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும் விடுதியில் தங்கியிருந்த சில மாணவர்களுக்கும் சவர்மாவை பார்சல் வாங்கிச் சென்றனர். இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் இரவு 10 மணியளவில் சவர்மாவை சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென 6 மாணவிகள், 7 மாணவர்கள் என மொத்தம் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக்கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் ஓட்டலில் என்ன உணவை சாப்பிட்டார்கள் என கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்து, கடைக்கு நோட்டீஸ் வழங்கி 'சீல்' வைக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.