திருவள்ளூர்
13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் கைது
|13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது சம்பந்தமாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் பிவின் (வயது 41). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிவின், 13 வயது சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு தனனுடைய வீட்டு மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமியை நிர்வாணமாக போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக பிவின் அந்த சிறுமியை தான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும். வரவில்லை என்றால் புகைப்படங்களை வெளியில் காண்பித்து விடுவேன் என மிரட்டி அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
கைது
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் இது குறித்து திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி இது சம்பந்தமாக போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.