காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் பந்தய விபத்தில் 13 வயது வீரர் சாவு
|ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் பந்தய விபத்தில் 13 வயது வீரர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் பந்தயம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் மெட்ராஸ் ரேஸ் டிராக் என்ற பெயரில் ரேஸ் கிளப் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் 17 வயதுக்குட்பட்ட இளம் பந்தய வீரர்கள் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் 12 முதல் 17 வயது வரையிலான தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளாவை சேர்ந்த 9 சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
சாவு
பந்தயத்தின் போது 3-வது சுற்றில் அருகே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ரேயஸ் கோபாரம் ஹரிஷ் (வயது 13) என்ற வீரர் நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். உடனே ஹரிஷை மீட்ட மீட்பு குழுவினர் தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஹரிஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மெட்ராஸ் ரேஸ் டிராக் ஊழியர்கள் மற்றும் பந்தய குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிஷ் கடந்த ஆண்டு நடந்த தேசிய போட்டியில் வெற்றி பெற்றவர் ஆவார்.