< Back
மாநில செய்திகள்
கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை
சென்னை
மாநில செய்திகள்

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
20 Aug 2022 1:05 PM IST

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தொடர்ந்து 12 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் கட்டி இருந்தது.

பலவகையான கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும், கட்டி குறையவில்லை. கதிர்வீச்சு சிகிச்சையும் பயன் அளிக்கவில்லை. இந்த நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த இளம் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்தனர்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 'டீன்' டாக்டர் சாந்திமலர் கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஒருபகுதியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி செயல்படுகிறது. அங்கு கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 21 வயது பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 'பிரான்ட்ஸ் டியூமர்' என்ற அரிதான கட்டி கண்டறியப்பட்டது.

புற்றுநோயியல் துறை பேராசிரியர் டாக்டர் சுப்பையா சண்முகம் தலைமையிலான டாக்டர்கள் குழு, இந்த கட்டி கல்லீரல் மற்றும் குடலுக்கு ரத்தத்தை வழங்கும் அடிவயிற்றில் உள்ள பெரிய ரத்த குழாய்களுடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். நோயாளி இளம் வயதை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள டாக்டர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி, கல்லீரல் மற்றும் குடலுக்கு ரத்த ஓட்டத்தை பாதுகாக்க, மிகவும் நுணுக்கமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து 12 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்த டாக்டர்கள் குழுவினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின், தீவிர கண்காணிப்பில் இருந்த அந்த பெண், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். மேலும், சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்து அந்த இளம்பெண் கடிதம் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்