செங்கல்பட்டு
செங்குன்றம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|செங்குன்றம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு மூங்கிலான் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். இவருடைய மகள் பிரித்திகா (வயது 15). இவர் செங்குன்றத்தை அடுத்த வடகரையில் உள்ள அரசு ஆதிதிராவிட நலப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவி வழக்கம்போல் தூங்க சென்ற நிலையில், வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி அடுத்த பாலவேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எஸ்தர் கெசியாள் (22). டிப்ளமோ நர்சிங் முடித்த இவர் தைராய்டு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், திருவொற்றியூர் சண்முகம் நகர் 1-வது தெருவைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த கார்த்திகேயன் (28) தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.