ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி 10 வயது காட்டு யானை உயிரிழப்பு
|யானை மின்சார கம்பியை கடித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
ஓசூர்,
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தாவரக்கரை கிராமத்தில் ஓசூரை சேர்ந்த பால் நாராயணன் என்பவர் கோழி பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் உள்ள ஒரு மின்சார கம்பத்தில் இருந்து அருகில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை போர்வெல்லுக்கு தரை வழியாக மின்சார ஒயர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நொகனூர் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் உணவு தேடி வெளியேறிய பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கோழிப்பண்ணை அருகே வந்துள்ளன. அப்போது ஆழ்துளை போர்வெல்லுக்கு கொண்டு செல்லப்பட்ட மின்சார கம்பி ஒரு யானையின் கால்களில் சுற்றி உள்ளது. அப்போது யானை அந்த மின்சார கம்பியை கடித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
மற்ற யானைகள் அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு சென்று விட்டன. காட்டு யானை உயிரிழந்தது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்த காட்டு யானை, பெண் யானை என்றும் சுமார் 10 வயது மதிக்கத்தக்கது என்றும் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.