< Back
மாநில செய்திகள்
தெருவோர குழாயில் குளித்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
மாநில செய்திகள்

தெருவோர குழாயில் குளித்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
29 May 2024 10:41 AM IST

லாரி டிரைவர் சிறுமியை தூக்கிக் கொண்டு லாரியின் சீட்டில் அமர வைத்து கடத்திச் செல்ல முயன்றார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள திருவக்கரை முத்துமாரியம்மன் கோவில் தவுட்டுக்குளம் பகுதியில் சாலையோர குடிநீர் குழாயில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று காலை குளித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது திருவக்கரையில் இருந்து லாரியில் கிரசர் மண் ஏற்றி வந்த, புதுவை சுத்துக்கேணி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன் (வயது 33) அங்கு இறங்கி தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதைப் பார்த்த சிறுமியின் உறவுக்கார பெண் அங்கு ஓடி வந்தார். திடீரென லாரி டிரைவர் சிறுமியை தூக்கிக் கொண்டு லாரியின் சீட்டில் அமர வைத்து கடத்திச் செல்ல முயன்றார். அப்போது சிறுமியின் உறவுக்கார பெண், டிரைவர் முருகனின் சட்டையைப் பிடித்து இழுத்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தகாத வார்த்தையால் பேசி சிறுமியை கீழே இறக்கிவிட்டு விட்டு, லாரியை வேகமாக எடுத்துச் சென்று விட்டார்.

சிறுமியிடமும், உறவுக்காரப் பெண்ணிடமும் நடந்தவற்றை விசாரித்த அப்பகுதி இளைஞர்கள், வானூர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அங்குள்ள போலீசார் இது போக்சோ பிரிவு என்பதால் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையம் செல்லும் படி கூறிவிட்டனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய இளைஞர்கள், போலீசார் செய்யக்கூடிய புலனாய்வு பணியை தாங்களே தொடர்ந்தனர். அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சி மூலம் லாரியின் பதிவு எண் மற்றும் அடையாளங்களை வைத்து திருவக்கரையில் உள்ள பல்வேறு இடங்களில் தேடினர். நேற்று மாலை சுமார் 4 மணியளவில் அதே லாரி நெமிலி வெற்றிவேல் கிரஷர் நிறுவன பகுதியில் லோடு ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தது.

சிறுமியும், உறவுக்கார பெண்ணும் கொடுத்த அடையாளத்தின் படி டிரைவர் முருகனை பிடித்து இளைஞர்கள் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தார். மேலும் இளைஞர்கள் சரவணன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, டிரைவருக்கு 'தர்ம அடி' கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து அவரை கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி நடத்திய விசாரணையில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. அதைத்தொடர்ந்து லாரி டிரைவர் முருகனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்